Wednesday, August 11, 2010

பாரத தேசத்தின் சில அவலங்கள்...!!!

பாரத தேசத்தின் சில அவலங்கள்!

1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம் கார்டு இலவசமாகக் கிடைக்கிறது.

2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்.

3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்.

4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில் பாதியளவு வேகத்தில்கூட அதாவது பாதி நேரத்தில்கூட அம்புலன்சும், தீயனைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை!

5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப் பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை!

6. அணியும் , ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும் , பழங்களும் நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகின்றன.

7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான லெமனில் (எழுமிச்சையில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது...

8.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

9.கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு.

கோதுமை மாவை சப்பாத்தியாக செய்துவிற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்துவிற்றால் வரி உண்டு!

10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலாமவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை!

11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டுவந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்!

இந்த நிலை மாறுவது எப்போது?
தூங்கும் பாரதமாதவைத்தான் தட்டி எழுப்பிக் கேட்க வேண்டும்!

Wednesday, August 26, 2009

Muthupet Lagoon

முத்துப்பேட்டை அலையாத்திக்காடுகள் MUTHUPET LAGOON

சென்னைக்கு தெற்கே 400 கிலோமீட்டர் தொலைவில் கோடியக்கரைக்கு அருகில் முத்துப்பேட்டை உள்ளது. நாகப்பட்டினத்திலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவு. சாலை வசதியும், தொடர்வண்டி வசதியும் உண்டு.
காவிரி வடிநிலத்தின் தென்முனைதான் இவ்வூரின் இருப்பிடம். காவிரியாற்றின் 6 கிளை ஆறுகள் முத்துப்பேட்டை பகுதியில் கடலுடன் கலந்து இரண்டு மிகப்பெரிய கடற்கழிகளை உருவாக்கியுள்ளன. படகு சவாரிக்கு ஏற்ற இடங்கள் இவை.

மேற்கே அதிராம்பட்டினத்திலிருந்து கிழக்கே கோடியக்கரைவரை காடுகளின் ஆதிக்கம்தான். தெற்கே பாக்நீரிணைப்பும், வடக்கே சேறும் சகதியும் நிறைந்த நிலப்பரப்பும் விளிம்புகட்டிநிற்கின்றன.

கடலுக்குள் ஆறுகள் சேரும் முன்பாக பல லகூன்கள் உண்டாகியிருக்கின்றன. லகூன்களின் கரையில் காணப்படும் காடுகள் தான் மாங்ரோவ் காடுகள் அல்லது அலையாத்திக்காடுகள்...........அலையாத்தி மரங்கள் நிறைந்திருப்பதால் இந்தப்பெயர். கடல் அலைகளின் வேகத்தை மட்டுப்படுத்தி நிலத்தைக்காப்பதால் காலம் காலமாக நிலவிவரும் தமிழ்ப்பெயர்.

முத்துப்பேட்டை மாங்குரோவ் காடுகள் பிச்சாவரம் மாங்குரோவ் காடுகளைவிட 10 மடங்கு பெரியது. தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாங்குரோவ் காடுகள் இவை.
13,000 ஹெக்டேரில் பரந்துவிரிந்திருந்த முத்துப்பேட்டை அலையாத்தி காடுகளில் இப்போது இருப்பது வெறும் 5,800 ஹெக்டேர் மட்டும்தான்.
காரணம்?
........இது என்ன கேள்வி?
....... மனிதன் தான்.

அலையாத்திக்காடுகள் இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் காணப்படும் இயற்கையின் அற்புதம். மிகச்சிறந்த சுற்றுலாத்தலமும் கூட.உப்புநீரிலும் கடற்கழிகளிலும் வளரக்கூடிய வெப்பமண்டல காடுகள் இவை . இவற்றிற்கென சிறப்பான பண்புகள் உண்டு. அலையாத்தி மரங்கள் வேர்களால் சுவாசிக்கக்கூடியவை. வேகமாக வளரக்கூடியவை. இந்தக் காடுகளை வளர்த்தெடுக்க பெரும் பொருட்செலவு தேவையில்லை.கடற்கரையை மண் அரிப்பிலிருந்தும் புயற்காற்றிலிருந்தும் அலையாத்திக்காடுகள் பாதுகாக்கின்றன என்பது பயனுள்ள செய்தி.

பல்வேறு காரணங்களால் முத்துப்பேட்டை அலையாத்திகாடுகளின் பரப்பளவு குறைந்து வருகிறது. இந்தக்காரணங்கள் அனைத்தும் மனிதர்களால் ஏற்பட்டது என்பதுதான் வெட்கப்படவேண்டிய விஷயம்.புதுப்புது இறால் பண்ணைகள், உப்பளங்கள் இவையெல்லாம் அலையாத்திக்காடுகளைச்சுற்றி முளைத்துவருகின்றன. 1986ல் எடுத்த செயற்கைக்கோள் புகைப்படங்களோடு 1996ல் எடுத்த செயற்கைக்கோள் புகைப்படத்தை ஒப்பிட்டுப்பாருங்கள். மனிதர்கள் அலையாத்திக்காடுகளின் பரப்பளவைக்குறைக்க எவ்வளவு சிரமப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியும்.
அலையாத்திக் காடுகளின் நீர்ப்பரப்பில் நீரின் இயல்பியல் வேதியியல் பண்புகள் மாற்றமடைந்துள்ளன என்பது ஆய்வுகளின் முடிவு. நச்சுத்தன்மையுள்ள கழிவுகள் கடல்நீரில் கலப்பதன் விளைவு இது என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இதனால் மீன்களும் பறவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.உணவுச்சங்கிலியின் ஒரு அற்புதமான கண்ணி இந்த அலையாத்திக்காடுகள். தாவரங்களின் மிச்சசொச்சங்கள் எல்லாம் மீன்கள், நண்டுகள், சிப்பிகள் இவற்றிற்கு உணவாகின்றன.அலையாத்திக்காடுகளின் மதிப்பை நாமெல்லாம் மிகவும் காதலிக்கும் அமெரிக்க டாலரில் கணக்கிட்டிருக்கிறார்கள். ஒரு ஹெக்டேருக்கு ஓராண்டிற்கு 11,819 டாலர்கள்!
நெல்விளைச்சலின் மதிப்பைப்போல 10 மடங்கு!
ஆனால் விறகுக்காகவும் கால்நடைகளின் தீவனத்திற்காகவும் இந்தக் காடுகள் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்ற செய்தி அதிர்ச்சியானது.
காலந்தாழ்த்தியாவது விழித்துக்கொண்ட வனத்துறை அலையாத்திக்காடுகளை பாதுகாக்க பெரும் முயற்சி எடுத்து வருவது பாராட்டத்தக்கது.

1986க்கும் 1996க்கும் இடைப்பட்ட காலத்தில் முத்துப்பேட்டையில் மட்டும் சுமார் 20ஹெக்டேர்
அலையாத்திக்காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இது மிகவும் குறைவான சேதாரம்தான்,.
வனத்துறையின் சீரிய முயற்சிக்கு கிடைத்த வெகுமதி என்றும் கொள்ளலாம்.
அலையாத்திக்காடுகளை பாதுகாக்கும் முயற்சிக்கு குரல்கொடுக்கும் அனைவருக்கும் நாம் தோள்கொடுப்போம்!
நண்பர்களே! அலையாத்தி காடுகளைப்பற்றிய கூடுதல் விவரங்களை அறியத்தாருங்கள்.

Saturday, August 22, 2009

தேசியக்கொடி குறித்த சில தகவல்கள்.....

நமது இந்தியாவின் தேசியக்கொடி குறித்த சில தகவல்கள் :

நமது இன்றைய மூவர்ணக்கொடி ஒரே நாளில் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல . அது பல மாற்றங்களுக்கு பிறகு பலரது உழைப்பால் இன்றைய நாளில் நாம் உபயோகிக்கும் மூவர்ணக்கொடியாக உருப்பெற்றது .

முதல் மூவர்ணக்கொடி :

இந்தியாவின் சுதந்திர போர் இருபதாம் நூற்றாண்டுகளின் துவக்கத்தில் தொடங்கிய வேளையில் , அதுவரை பிரிட்டிஷ் அரசாங்கத்தினை சார்ந்த தேசியக் கொடியை மட்டுமே பயன்படுத்தி வந்த இந்தியர்கள் தமக்கென ஒரு கொடியையும் அது இந்தியாவின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்ட ஒரு கொடியாக இருக்க வேண்டும் என கருதி 1906ஆம் ஆண்டில் வங்காளத்தில் சுசிந்தர பிரசாத் போஸ் என்பவரால் வங்காளத்தை இந்தியாவில் இருந்து பிரிப்பதை எதிர்த்து நடத்தப்பட்ட ஒரு போராட்டத்தில் , இந்தியாவில் முதன்முதலாக மூவர்ணக்கொடி இடம் பெற்றதாக வரலாற்றுச்சான்றுகள் கூறுகின்றன . நடுவில் மட்டும் சீக்கியர்களுக்காக மஞ்சள் நிறம் சேர்க்கப்பட்டது.

இம்மூவர்ணக்கொடியில் , காவியில் நீள்வாக்காக 8 நட்ச்சத்திரங்களும் , மஞ்சளில் வங்காள மொழியில் வந்தே மாதரமும் , பச்சையில் ஒரு சூரியன்,சந்திரன் அதன் மீது ஒரு நட்சத்திரத்தோடு அமைந்தது .


முதலாம் உலகப்போரில் நமது கொடி :

1907ல் முதலாம் உலகப்போரின் ஆரம்ப காலத்தில் , பிக்காய்ஜி காமா என்பவர் , ஜெர்மனியில் இந்தியாவின் மூவர்ணக்கொடியில் சில மாற்றங்களோடு அங்கே வெளியிடப்பட்ட இக்கொடி , முதலாம் உலகப்போருக்குப்பின் பெர்லின் கமிட்டி கொடி என அழைக்கப்பட்டது .

இக்கொடியில் இஸ்லாத்தை காட்டுவதாக பச்சைநிறம் முதலாவதாகவும் அதில் அப்போது இந்தியாவில் இருந்த எட்டு மாகாணங்களை குறிக்கும் வகையில் எட்டு தாமரைகளும் இந்து மதத்தை வலியுருத்தும் காவி நிறம் கடைசியிலும் அதில் வலதுபுறம் சூரியன் மற்றும் இடதுபுறம் சந்திரனும் இடம்பெற்றிருந்தது , நடுவில் வெள்ளைநிறத்தினூடே வந்தேமாதரம் தேவநாகரியில் எழுதப்பட்டிருந்தது . இக்கொடி முதலாம் உலகப்போரில் மெசபட்டொமியாவில் நடந்த போரில் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .

1917 ல் மாற்றம் :

1917 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுயாட்சி வேண்டி அன்னிபெசன்ட் அம்மையாரும் , பாலகங்காதர திலகரும் ஒரு புதிய கொடியை உருவாக்கினர் . ஆனால் இக்கொடி அவ்வளவாக மக்களை சென்றடையவில்லை.

காந்தியின் வருகை :

மகாத்மா காந்தி அவர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தில் கொடியின் பல மாற்றங்களை கொண்டு வந்தார் , 1921 ஆம் ஆண்டு ஒரு புதிய வடிவில் கொடி உருவாக்கப்பட்டது . அக்கொடியில் இந்தியாவின் சிறுபான்மையினரின் மத அடிப்படையில் வெள்ளை(கிறித்துவம்),பச்சை(இஸ்லாம்),காவி(இந்து) என வரிசையாகவும் நடுவில் ராட்டையும் இடம் பெற்றது , அது அப்போதைய ஐயர்லாந்து நாட்டின் கொடியை ஒத்ததாக இருந்தது . இது பல அரசியல் காரணங்களால் இந்திய காங்கிரஸ் மற்றும் பெருவாரியான சுதந்திர போராட்டங்களிலும் உபயோகப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மதம் சார்ந்த ஒற்றை நிற இந்தியக்கொடி :

இதனை அடுத்து ஆரஞ்சு (ஆக்கர்) நிறத்தில் இடது மூலை உச்சியில் ராட்டையுடன் ஒரு கொடி உருவாக்கப்பட்டது , அதுவும் இந்திய தேசிய காங்கிரஸால் நிராகரிக்கப்பட்டது.

ராட்டையுடன் இந்திய தேசிய காங்கிரஸின் கொடி 1931 :

1931 ல் காந்தியால் உருவாக்கப்பட்ட இக்கொடி இன்றைய நமது தேசிய கொடியோடு ஒத்து இருந்தது , நடுவில் அசோக சக்கரத்திற்கு பதிலாக ஒரு ராட்டை இடம் பெற்றது , இது அக்காலகட்டத்தில் அனைவாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு மக்களால் பல சுதந்திர போராட்டங்களிலும் பயன்படுத்தப்பட்டது .

இந்தியாவின் இன்றைய தேசியக்கொடி :

1947 ஆகஸ்டு இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன் திரு.ராஜேந்திர பிரசாத் , திரு.அப்துல்கலாம் ஆசாத், திரு.ராஜாஜி, திருமதி.சரோஜினி நாயுடு , ஆகியோரது தலைமையில் ஒரு குழு உருவாக்கப்பட்டு இந்தியாவிற்கான தேசிய கொடியை வடிவமைக்க முடிவானது , அவர்கள் அப்போதைய இந்திய தேசிய காங்கிரசின் கொடியை சில மாற்றங்களோடு எடுத்துக்கொள்ள முடிவானது . அக்கொடி ஆகஸ்ட் 14 ஆம் தேதி முடிவாகி , ஆகஸ்ட் 15 ஆம் ஆண்டு இந்தியாவின் சுதந்திர நாளன்று மக்களுக்கு அற்பணிக்கப்பட்டது .

அதுவே இன்று வரை நமது தேசியக்கொடியாக பட்டொளி வீசி பறக்கிறது.


* ஒரு ஆண்டில் இந்தியாவில் நமது கொடி விற்கப்படும் கொடிகளின் எண்ணிக்கை 40 மில்லியன் .

* இந்தியகொடியை உடையாக அணிவது தடை செய்யப்பட்டிருந்தாலும் , அது பிற்காலத்தில் கால்சட்டை மற்றும் உள்ளாடைகளாக பயன்படுத்த மட்டுமே தடை என்ற அளவுக்கு குறைக்கப்பட்டது . மேல்சட்டையாக அணிய அனுமதி உண்டு.

*எவரெஸ்ட் சிகரத்தில், முதன்முதலாக மே மாதம் 29 ஆம் தேதி 1953 ஆம் ஆண்டு நேபாள கொடியுடன் நடப்பட்டது.

*1971ல் இந்திய கொடி அப்பல்லோ 15 செயற்கைக்கோளில் அதில் சென்ற விண்வெளி வீரர் கமாண்டர் ராகேஷ் சர்மா அணிந்திருந்த சட்டையில் மெடலாக பயணித்தது .

*இந்தியாவிலேயே உயரமான கொடியேற்றம் ( 138 feet ) சென்னை கோட்டையில் உள்ளது

Thursday, August 20, 2009

கனவின் வெற்றி கல்பனா சாவ்லா.........

ஒரு எண்ணம் இது.. ஒரு கனவு இது.. ரிலையன்ஸ நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் கால் பதித்த பொழுது இந்த வரிகள் மிகப் பிரபலம். திருபாய் அம்பானியின் இந்த எண்ண்த்தின் வலிமை அந்த கனவின் சக்தி, அது இந்தியாவின் கடைகோடி மனிதனுக்கும் மலிவு விலையில் மொபைல் போனை விற்ற பொழுதுதான் புரிந்தது. ஆஹா அந்த மனிதரின் எண்ணங்களுக்குத் தான் எவ்வளவு சக்தி.
ஒவ்வொரு வெற்றிகரமான மனிதருக்கு பின்னாலும் ஒரு கனவு இருக்கிறது. அதுவே அந்த மனிதனுக்கு ஆற்றல் தரும் ஆக்க சக்தி. அதுவே அந்த மனிதனுக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தரும் காமதேனு, கற்பக விருட்ஷம். இப்படி ஒரு கனவு தான் கல்பனா சாவ்லாவையும் உருவாக்கியது.
வெற்றியாளர்களின் வாழ்க்கையிலிருந்து வெற்றிக்கான ரகசியங்களை நாம் இலவசமாகவே நிறைய பெற முடியும். ஆம். முட்டாள்கள் தான் பட்டுத் தெரிந்து கொள்கிறார்கள். அறிவாளிகள் பிறர் அனுபவங்களிலிருந்து தெரிந்து கொள்கிறார்கள். எனவே வாருங்கள் இந்திய அறிவியல் மூளையின் மணி மகுடமாக விளங்கும் கல்பனா சாவ்லாவின் வாழ்க்கையிலிருந்து வெற்றியின் ரகசியங்களை நாம் தெரிந்து கொள்வோம்.
திட்டவட்டமான கனவு
கல்பனா சாவ்லாவின் சின்னஞ்சிறு வயதிலேயே எது வேண்டும்? எது தனது பாதை என்று அவருக்கு திட்டவட்டமாக தெரிந்திருந்தது. ஆம் அவள் விண்வெளிக் கனவுகள் பள்ளி வயதிலேயே தொடங்கியது. பள்ளியில் ஓய்வு நேரத்தில் கல்பனா ஜன்னல் வழியே விண்ணில் கரைந்தாள். வானத்து மேகங்களின் வர்ண ஜாலங்களில் தன்னை இழந்தாள். சூரிய ஒளிக் கதிர்களின் பரம ரசிகையானாள்.
“ஏண்டி! எப்ப பார்த்தாலும் வானத்தையே பார்த்துக் கொண்டிருக்க?” தோழிகள் கேட்கும் போது, சிரித்துக் கொண்டே சொன்னாள். “என்னவோ தெரியல! அந்த வானத்தை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமென்று எனக்கு தோன்றுகிறது! என்று சொல்லி சிரித்தாள்.
பள்ளி மாணவிகள் ஓவிய வகுப்பின் போது, மலைகளையும், நீர்வீழ்ச்சிகளையும், பறவைகளையும், மிருகங்களையும் வரைந்து மகிழும்போது, கல்பனா மட்டும் நீல நிறவானத்தையும், அதில் நட்சத்திரங்களையும், நிலவையும் வரைந்து, அதில் ஒரு விமானம் பறப்பது போன்று படம் வரைவாள். ஆம் எந்த நேரத்திலும் அவள் எண்ணத்தில் வானமும், விமானமும் தான் நிறைந்திருந்தன.
பள்ளியிலிருந்து வீடு வந்ததும், மாடியில் அமர்ந்து கொண்டு, மீண்டும் வானத்தையும், வான் நிலவையும், நட்சத்திரங்களையும் பார்த்து பார்த்து ரசிப்பாள் கல்பனா. இதைப் பார்த்து குடும்பமும் தோழிகளும் கேட்க, “என்றாவது ஒரு நாள் நானும் அந்த வானத்திற்கு செல்வன். நிலவையும் நட்சத்திரங்களையும் அருகில் சென்று ரசிப்பேன்” என்று கல்பனா சொன்னாள். ஆம் வானத்தை நேசித்த கல்பனா சாவ்லாவுக்கு வானத்தை தாண்டி விண்வெளியில் தான் பறக்க வேண்டும் என்ற திட்டவட்டமான ஆசை இருந்தது.
அது வெறும் கனவாக மட்டுமல்ல. அவள் பேச்சில், மூச்சில், எண்ணத்தில், எல்லாமுமாக நிறைந்திருந்தது.
வெற்றிக்கான சூத்திரமாக திருவள்ளுவர் இதைச்சொல்கிறார்.
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.
நீங்கள் கேட்டது கேட்டது போலவே கிடைக்கும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால், மிகவும் எளிது. அதையே நினைத்துக் கொண்டிருந்தால் போதும், ஆனால் கல்பனா அதையே நினைத்துக் கொண்டிருக்க மட்டும் செய்யவில்லை. அவள் தன்னை விண்வெளிப் பெண்ணாக நினைத்தாள். விண்வெளிப் பெண்ணாகவே மாறினாள்.
ஆம். அந்த கற்பனை தான், கனவு தான், அவள் விரும்பியதை அடைவதற்கான சக்தியை அவளுக்கு கொடுத்தது.
திடமான நம்பிக்கை
கல்பனாவின் விண்வெளிக் கனவை அங்கீகரிக்க, பாராட்ட அவள் தோழிகளோ! குடும்பமோ முன்வரவில்லை. மாறாக கேலியும் கிண்டலும் தான் பரிசாக்க் கிடைத்தது. காரணம், அப்பொழுது 1970களில் நம் நாட்டில் இருந்த அறிவியல் வளர்ச்சி மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் நிலையில் இல்லை. ஏன் இன்னும் அது கனவாகவே உள்ளது. அப்படி எந்த ஒரு வாய்ப்பும் கண்ணுக்கு தெரியாத சூழ்நிலையிலும்…. தன்னால் விண்வெளிக்கு செல்ல முடியும் என்று உறுதியா, திடமாக நம்பினார் கல்பனா…
கல்பனாவின் திட்டவட்டமான குறிக்கோளுடன் அவரது உறுதியான நம்பிக்கையும் சேர்ந்து, ஏற்படுத்திய அதிர்வலையை உடனே ஏற்றுக் கொண்ட அவள் ஆழ் மனம் அதற்கான வெற்றிப் பாதையை உருவாக்கித் தந்தது.
நம்பிக்கை மட்டுமல்ல. நினைத்ததை அடைவதற்கு அதறகு ஈடான விலையை தந்தாக வேண்டும் என்பதை தெரிந்திருந்தார் கல்பனா. ஆம். அவர் தந்த விலை. அதற்கான தொழில் நுட்ப அறிவினை பெறுவதற்கான அவரது அயராத உழைப்பு.
பஞ்சாப் இன்ஜினியரிங் கல்லூரியில் விமானப் பொறியியல் பிரிவில் பல்கலைக் கழகத்திலேயே முதல் இடம் பெற்றார்.
அமெரிக்காவில் அர்லிங்டன் பல்கலைக் கழகத்தில் ஏரோ நாட்டிகல் பொறியியல் பிரிவில் எம்.எஸ். பட்டம் பெற்றார்.
அமெரிக்காவில் கொலொராடா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து முனைவர் பட்டம் 1988ல் பெற்றார்.
அதே ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள எம்.சி.ஏ.டி. இன்ஸ்ட்டியூட்டில் விஞ்ஞான ஆய்வாளராக சேர்ந்தார்.. விண் வெளி குறித்த ஆய்வுகளில் தலைசிறந்து விளங்கினார். தன் ஆய்வுத் திறனால் நாசாவில் நுழைந்தார். நாசாவின் நட்சத்திரம் ஆனார். இதற்கு பின்னால் இருந்த அவரின் கடின உழைப்பு, ஈடுபாடு, ஆர்வம் ஆகியவை வெற்றிக்கு அவர் தந்த விலை என்றால் அது மிகையல்ல.
தளராத முயற்சி
அமெரிக்காவின் ‘தேசிய ஆகாயப் பயணவியல் விண்வெளி நிர்வாக நிறுவனம் என்ற NASA - வில் விஞ்ஞானியாவது என்பது அவ்வளவு எளிதானதல்ல.
அமெரிக்காவில் வசித்த இந்திய டாக்டர் ஒருவர். “கல்பனா! NASA- வில் அமெரிக்கர்களை மட்டும்தான் பணியில் சேர்த்துக் கொள்வார்கள். உன்னைப் போன்ற வெளிநாட்டுக்காரர்களை அவர்கள் தேர்வு செய்யமாட்டார்கள்” என்று சொன்னார். அதற்கு “இல்லையில்லை! எனக்கு திறமை இருக்கிறது. போதுமான தகுதியும் இருக்கிறது. அதனால் நாசாவில் நான் இடம் பிடிப்பேன்” என்று நம்பிக்கையோடு சொன்னார் கல்பனா.
ஆனால் அந்த முயற்சியில் முதல் முறை அவருக்குத் தோல்வியே கிடைத்தது. இருப்பினும் விடாமுயறசியோடு தன் அறிவை மேலும் வளர்த்துக் கொண்டு அடுத்த முறைவெற்றி பெற்றார்.
தோல்வியைத் தாண்டி ஒரு அடி எடுத்து வைத்தாலும் வெற்றி நிச்சயம் என்ற வெற்றி சித்தாந்தத்தை நிரூபித்தார்.
மனித உறவுகளில் அக்கறை
கல்பனா விஞ்ஞானியாக இருந்த போதிலும் பரத நாட்டியத்தை முறையாகக் கற்றுத் தேர்ந்தவர். இதன் பின்புலத்தில் நாசா - மருந்தகத்தில் பணியாற்றிய வசந்தாலட்சுமி என்பவர் மகளின் பரத நாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியில் கல்பனா கலந்து கொண்டார்.
அழைத்தார்கள்… சென்றோம்.. முடிந்தது என்று இயந்திரத்தனமாக இருந்து விடாமல், மறுநாள் “நான் அறியாத பலவற்றை உங்கள் நடன அரங்கேற்றத்தின் போது நான் அறிந்து கொண்டேன். அத்தகைய வாய்ப்பினை எனக்கு அளித்தமைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று வசந்தலெட்சுமி புட்சா-வுக்கு கடிதம் எழுதினாள் கல்பனா சாவ்லா. எத்தகைய உயர்ந்த செயல். இது போன்ற மனித உறவுகளை வளர்க்கும் நல்ல பழக்கம் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது?
கனவின் வெற்றி
முதல் விண்வெளிப் பயணத்திற்கு பிறகு சான் பிரான்சிஸ்கோவில் உள்ள புட்ஹில் கல்லூரியில் பேசிய கல்பனா இறுதியாக மாணவர்களை நோக்கிச் சொன்னார்.
உங்கள் கனவுகளை கலைத்து விடாதீர்கள், எது நேர்ந்தாலும் களைத்து விடாதீர்கள், அவற்றை நனவாக்க முயலுங்கள் - இறுதி வெற்றி உங்களுக்கே! என்றார். இதுதான் கல்பனாவின் தாரக மந்திரம்.
அதேபோல தன் கடைசி விண்வெளிப் பயணத்தின் பொழுது கல்பனா சாவ்லா தாம் பயின்ற பஞ்சாப் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு அனுப்பிய செய்திதான் வெற்றி பெற விரும்பும் ஒவ்வொருவரும் பின்பற்றவேண்டிய திருவாசகம். அவை -
“கனவுகளிலிருந்து வெற்றிகளை சென்றைடையும் பாதைகள் எப்போதும் இருந்து கொண்டிருக்கின்றன… அவற்றைக் கண்டு அடையும் பார்வையும் அடைவதற்கான தைரியமும், அதில் பயணிக்கும் பொறுமையும் உங்களுக்கு உண்டாகட்டும்” இதுவே கல்பனா சாவ்லாவின் செய்தியும் அவரின் வாழ்க்கை தரும் செய்தியுமாகும்.


--
Thanks and Regards

Ashok.....

நாம் நாமாகவே இருப்போம்.....இந்தியாவின் பெருமையை உலக அளவில் உயர்த்துவோம்.....!!!!

நாம் எங்கே போய் கொண்டு இருக்கிறோம். சற்று சிந்தித்துப் பாருங்கள். பெண் வர்க்கத்தை ‘பாரத மாதா’ வென்று அழைக்கப்படும் இத்திருநாட்டில் பிறந்த நாம் கலாச்சாரத்திற்காகவே இவ்வுல அரங்கில் மதிக்கப்படுகிறோம் என்பதில் சிறிதும் ஐயமில்லை அல்லவா? ஆனால் இப்பொழுது இந்நிலை மாறிவருவதைக் காணும் பொழுது சற்று அச்சமாக உள்ளது.
அங்கங்களை மறைப்பதற்காக தான் உடையே தவிர, அதை வெளிக்காட்ட அல்ல. அயல்நாட்டவர்களின் உடை அவர்களின் கலாச்சாரத்திற்கு பொருத்தமாக இருக்கலாம். ஆனால், ஒருவனுக்கு ஒருத்தி என வாழும் நம் நாட்டு கலாச்சாரத்திற்கு ஆடை குறைவின்றி உடை அணிவது தான் சிறப்பாகும். நாகரிகம் என்ற பெயரில் இன்றைய பெண்கள் சிலர் அணியும் உடையை காணும் பொழுது பெண்களுக்கே கண் கூசுகிறது. ஆண்களுக்கு சொல்லவே தேவையில்லை.
நாடு என்ன செய்தது நமக்கு என்று கேட்காமல், நீங்கள் எதுவும் நாட்டுக்கு செய்யாவிட்டாலும், இந்நாட்டின் பழமையான கலாச்சாரத்திற்கு பங்கம் விளைவிக்காமல் இருப்பதே நீங்கள் நாட்டிற்கு செய்யும் பேருதவியாகும். இந்தியர்களை வெளிநாட்டவர் விரும்புவதற்கு காரணமே நமது கலாச்சாரமும், அயராத உழைப்புமே ஆகும். எல்லா துறையிலும் அயல்நாட்டினருக்கு ஈடு இணையாக நாம் முன்னேறி வருகிறோமே ஏன்? உடை விஷயத்தில் மட்டும் கூடாது என்று நினைப்பது மாபெரும் தவறாகும்.
வெள்ளித்திரை, சின்னத்திரை போன்ற மீடியா பொழுதுபோக்கிற்காகவே தவிர, அதில் காட்டப்படும் விஷயங்களை அப்படியே பின்பற்றுவதற்காக அல்ல. “மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா” என்றார் பாரதியார். அதைவிட இந்தியராய் பிறந்ததற்கு பெருந்தவம் செய்திருக்க வேண்டும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை குடும்ப ஒற்றுமை, நல்ல கலாச்சாரம் போன்றவை நம் நாட்டில் தான் காண முடியும்.
சுடிதார் நல்ல உடைதான், ஆனால் துப்பட்டா, கழுத்திற்கா அல்லது மார்பிற்கா என்று தெரியவில்லை. நிறைய பேர் இதை மனதில் கொள்வதில்லை. இன்றைய காலகட்டத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும், வாகனம் ஓட்டும் பெண்களுக்கும் சுடிதார் மிக வசதியான உடை ஆகும். நைட்டி என்ற பெயரே இரவில் வீட்டிக்குள் அணியும் உடை என்று தானே பொருள். ஆனால் இன்றைய பெண்கள் அதை அணிந்து கொண்டு வெளியே வருவதைப் பார்க்கும் பொழுது மிகவும் வருத்தமாக உள்ளது.
மேலும் பொது இடங்களில் எப்படி நடந்து கொள்வது என்பது இன்றைய தலைமுறையினருக்கு தெரிவதில்லை. திருமணம் ஆனவர்கள் கூட பீச், பூங்கா கோயில் போன்ற இடங்களில் வரம்பு மீறி நடந்து கொள்வதைப் பார்க்கும் பொழுது, நாம் இந்தியாவில் தான் இருக்கிறோமா என்று சந்தேகம் ஏற்படுகிறது. ஆடை குறைப்பினால் கற்பா குறைந்துவிடும் என்று நினைக்காதீர்கள். நன்றாக உடை உடுத்தினால் எல்லோரும் மதிப்பார்கள். போற்றுவார்கள்.
இன்று பெரிய நகரங்களில் பெண்கள் சிகரெட் பிடிக்கிறார்கள். மது அருந்துகிறார்கள் என்று கேள்விப்படும் பொழுது மனம் அழுகிறது. எதற்காக இந்த முறையற்ற வாழ்க்கை, கேட்டால் மனஅழுத்தம் என்று கூறுகிறார்கள். கிராமத்தில் வசிக்கும் குடும்ப தலைவிகளுக்குக் கூட மனஅழுத்தம் உண்டு. இதற்கு தீர்வு இந்த பழக்கங்கள்தான் என்றால் படிப்பு எதற்கு. இதற்கு மாற்றுவழி வேண்டும் என்றால் நல்ல ஆரோக்கியமான கருத்துகள் உள்ள புத்தகங்கள் படிக்கலாம். விடுமுறை நாட்களில் அருகில் உள்ள அனாதை, ஊனமுற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களுக்குச் சென்று அங்குள்ளவர்களுக்கு மன ஆறுதல் கொடுக்கலாம். இப்படி எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. கலாச்சாரம் என்ற பெயரில் கெட்ட பழக்கங்களுக்கு உங்களை நீங்களே பலியாடுகள் ஆக்கிவிடாதீர்கள்.
ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி, விவேகானந்தர் போன்ற ஆன்மீக பெரியோர்களை உலகிற்கே தந்த புண்ணிய பூமியில் பிறந்தவர்கள் நாம். அதன் கலாச்சாரத்தை நிலை நாட்ட வேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும் ஆணுக்கு நிகர் பெண்கள் என்று எல்லா துறையிலும் முன்னேறி வரும் இக்காலத்தில் ஆண்களுடன் பெண்கள் பழக வேண்டி உள்ளது. இது தவிர்க்க முடியாதது. ஆனால் அது எல்லைக்குள் இருக்க வேண்டும். ஆண்கள், பெண்களை தோழியாக, சகோதரியாக நினைக்கும்படி இருக்க வேண்டும். நட்பு, அவர்களின் உணர்ச்சிகளை தூண்டும்படி உடை, நடை இருத்தல் தவறாகும்.
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
அதனால் இதை ஒரு சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ளாமல் இன்றைய தலைமுறையினர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வேண்டாமே! இந்த அயல் நாட்டு கலாச்சார மோகம்.
நாம் நாமாகவே இருப்போம்.
இந்தியாவின் பெருமையை உலக அளவில் உயர்த்துவோம்.


--
Thanks and Regards

Ashok.....

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 எளிய வழிமுறைகள்......!!!

தன்னம்பிக்கையே வெற்றிக்கு முதல்படி எனலாம். பல வழிகளில் நாம் தன்னம்பிக்கையை இழக்க நேரிட் டாலும் கீழ்கண்ட எளிய முறைகளை நாம் பின்பற்றினால் நமது லட்சியத்தை எளிதில் எட்ட முடியும்.
ஆடை
உங்கள் ஆடையில் கவனம் செலுத்த வேண்டும். மலிவு விலையில் ஆடைகள் பல வாங்குவதற்கு பதில் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு அணியக்கூடிய நல்ல தரமான ஆடைகளை உடுத்தலாம். அவை எளிதில் கிழியாது. பார்க்கவும் எடுப்பாக இருக்கும். ஆடையை மாற்றி எளிய ஸ்டைலுக்கு மாறினால் நீங்கள் நினைப்பது நடக்கும். தன்னம்பிக்கையை ஊக்கப்படுத்தும் குணம் நாம் அணியும் ஆடைகளுக்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. உங்கள் காலணியிலும் கவனம் செலுத்தவும்.
வேக நடை
அட வேக நடையில் என்ன ஆகப்போகிறது என்று தானே நினைக்கிறீர்கள். ஒருவரது நடையை வைத்தே அவர் தெம்பாக வருகிறாரா, சோம்பலாக வருகிறாரா என்று கண்டு பிடித்து விட முடியும். சற்று வேகமான நடையை பார்த்ததுமே எதிரே இருப்பவருக்கு நம்மால் எதையும் சுறுசுறுப்பாக முடித்துவிட முடியும் என்றநம்பிக்கையை ஏற்படுத்தும். ஆகவே இன்றிலிருந்து 25 சதவிகித வேகத்தை உங்கள் வழக்கமான நடையில் கூட்டுங்கள்.
நிமிர்ந்த நிலை
எப்போதுமே நிமிர்ந்த நிலையில் நிற்கவோ, அமரவோ வேண்டும். தோள்களை தொங்கிய படியே வந்தால் அவரால் தன்னம்பிக்கையோடு எதையும் செய்யமுடியாது என பார்ப்பவர் எண்ணிவிடுவர். நிமிர்ந்து நிற்பது, தலையை தொங்கப்போடாமல் இருப்பது, எதிர் உள்ளவர் களின் கண்களை நேரே பார்த்து பேசுவது போன்றவை தன்னம்பிக்கை உள்ளது என்பது சொல்லாமல் சொல்லும் குணமாகும். பார்ப்பவருக்கும் நாம் நல்ல தன்னம்பிக்கை உடையவர் என்ற உணர்வை உண்டாக்கும். ஆகவே சரியான நிலையில் நடப்பது, உட்கார்வது, நிற்பது நல்லது.
கேட்பது
கேளுங்க! கேளுங்க! நல்ல பாசிடிவ் ஆன விஷயங்களையும், தன்னம்பிக்கை ஊட்டும் நல்ல பேச்சாளர்களின் பேச்சை அடிக்கடி கேட்கவும். 30 - 60 நொடிக்குள் உங்களது லட்சியம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றி சிறு குறிப்பு எடுத்து கண்ணாடி முன் நின்று தினமும் சப்தமாக பேசி பழகுங்கள். அல்லது எவ்வப்போது தன்னம்பிக் கையை தூண்டவேண்டுமோ அப்போது இவ்வாறு பலமுறை சொல்லிப் பார்க்கவும்.
நன்றி
உங்களது வாழ்க்கையில் எவ்வளவோ நல்லதும் வெற்றியும் கிடைத்திருக்கும். அவற்றை பட்டியல் இடுங்கள். அது உங்களது படிப் பாகட்டும், உங்களது திறமையாகட்டும், நல்ல உறவாகட்டும், அவ்வாறு பட்டியல் இடும்போது தான் எத்தனை விதமான நல்ல வாய்ப்புகள் மற்றும் தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய விஷயங் கள் நம் வாழ்வில் நடந்து உள்ளது என்பது தெரியும். இவை நமது மனச்சோர்வை அகற்றி தன்னம்பிக்கையோடு வாழ உதவியாக இருக்கும்.
மனதார பாராட்டுங்கள்
நம்மை நாமே “நெகட்டிவ்”வாக நினைக்கும் போது, மற்றவர்களை பார்ப்பதும், பேசுவதும் கூட நெகட்டிவ்வாக இருக்கும்! இதிலிருந்து விடுபட முதலில் மற்றவர்களை மனதார பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள். சின்ன விஷயமாக இருந்தாலும், பெரிதாக பாராட்டுங் கள், மற்றவர்கள் பற்றி குறைகூறுவதை விடுங்கள். இப்படி நடந்து கொண்டால் உங்களை மற்றவர்களுக்கு பிடித்துப் போகும். இதனால் நமக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். மற்றவர்களின் நல்ல குணாதிசயங்களை காணும் போது, நமக்குள்ளே மறைந்திருக்கும் நல்ல குணாதிசயங்களும் தானே தெரியவரும்.
முன்னாலே
பள்ளி, கல்லூரி, விழா மற்றும் கூட்டங்களில் அமரும் போது, எப்போதும் பின் இருக்கையில் அமரவே விரும்புவர். இது தன்னம்பிக்கை குறைபாடாகும். ஆகவே இனிமேல் எங்கு சென்றாலும், முன் இருக்கையில் தைரியமாக உட்காருங்கள். இதனால் உங்கள் மனதில் உள்ள பயம் போய்விடும். தன்னம்பிக்கை கூடும்.
பேசுங்க
சிலர் பலர் கூடி இருக்கும் போது பேசவே தயங்குவர். மற்றவர்கள் நம்மை முட்டாள் என நினைத்து விடுவார்களோ என்ற பயம்தான். இனி பயம் இன்றி உங்கள் மனதில் பட்டதை தைரியமாக சபைகளில் எடுத்துப் பேசவும். இதனால் நமது எண்ணத்தில் ஒரு நம்பிக்கை பிறக்கும். மற்றவர்களும் உங்களை தலைவராக ஏற்றுக் கொள்வர். எல்லோரிடத்திலும் தைரியமாக பேச ஆரம்பித்தாலே, தன்னம்பிக்கை உங்களை தேடி, ஓடி வரும்.
உடல்வாகு
நமது உடையும், உடல் வனப்பும், தன்னம்பிக்கைக்கு கை கொடுக்கும். அளவுக்கு மீறி குண்டாகவோ, மிக ஒல்லியாகவோ இருந்தால் நம்மீதே நமக்கு நம்பிக்கை இழக்க நேரிடும். சக்தி குறையும். ஆகவே உடற்பயிற்சி செய்து, நமது உடலை பாதுகாப்பாக வைத்துக் கொண்டால், தன்னம்பிக்கை உங்களுக்கு கிரீடமாக அமரும்!
நாடு
நாடென்ன செய்தது நமக்கு… என கேள்விகள் கேட்பது எதற்கு? நாம் என்ன செய்தோம் அதற்கு என்று சற்று சிந்தித்தால் பலன் கிடைக்கும். நம்மை பற்றியே எப்போதும் சிந்திக்கக்கூடாது. நம்மை சுற்றி உள்ளவர்கள் பற்றியும், சமுதாயத்தைப் பற்றியும் சிந்தித்து, நம்மை ஈடுபடுத்திக் கொண்டால், தன்னம்பிக்கை வளரும். இதனால் ஏற்படும் தன்னம்பிக்கை நமது எல்லாத் திறனையும் வெளிக்காட்ட உதவியாக இருக்கும் என சொல்லவும் வேண்டுமோ?
இவற்றை நாளைக்கு என தள்ளிப்போடாமல் இன்றே “இன்ஸ்டண்ட்’ முடிவு செய்து, துவக்குங்கள் இத்திருநாளை இனி வெற்றி உங்கள் பக்கமே!!


--
Thanks and Regards

Ashok.....

சுயவலிமை பெற்ற மனிதர் களாக எழுந்து நில்லுங்கள்...!!!

மண்ணில் பிறக்கும் அனைத்து மனிதனும் வீட்டிற்கோ நாட்டிற்கோ ஏதாவது பயன் தரும் விதத்தில் தன்னுடைய செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறான். ஆனால் சோம்பேறித் தனத்தினாலும் தள்ளிப் போடுதலினாலும் சாதிக்க வேண்டியதை மறந்து போகிறான். அப்படி மறந்து போகின்றவர்களின் இதயத்தை தூசுதட்டுவது மிக முக்கியப் பணியாகும். இது எல்லோருடைய கடமையும் கூட…..
தனிமனிதனின் முயற்சிதான் குடும்பத்தை வளப்படுத்துகிறது. குடும்பங்களின் வளர்ச்சி சமூகத்தை வளப்படுத்துகிறது. சமூகத்தின் வளர்ச்சி நாட்டை வளப்படுத்துகிறது. அப்படியானால், ஒவ்வொரு தனிமனிதனும் வளர்ச்சிப்பாதையில் போராட வேண்டும் என்பது தெளிவாகிறது. லெபனான் நாட்டுக்கவிஞன் கலீல் ஜிப்ரான் “”நாடு நமக்கென்ன செய்தது என்று கேட்காதே, நாட்டிற்கு நாம் என்ன செய்தோம் என்று கேள்” என்று குறிப்பிடுகிறார். நாட்டிற்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்றால் முதலில் முயற்சி செய்ய வேண்டும். நாம் செல்லும் இலக்கின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும், தன்மீது தானே நம்பிக்கை வைக்கவில்லை என்றால் ஒருபோதும் வெற்றியடைய முடியாது. “”எவன் ஒருவனுக்கு தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன். பண்டைய மதங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று சொல்கிறது” என்று சுவாமி விவேகானந்தர் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
கிடைக்கும் என்று போராடுவதை விட, கிடைக்க வேண்டும் என்று போராட வேண்டும். நாம் எதுவும் செய்யாமல் இருந்து விட்டு தெய்வத்திடம் முறையிடுவது மூடநம்பிக்கைதான் என்பதில் சந்தேகமே இல்லை. “தெய்வம் சோறுபோடும் என்று திண்ணையில் உட்கார்ந்திருந்தால் சோறு போடாது’ என்று கிராமப்புறங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்.
“”‘எழுந்து நின்று போராடு. ஓர் அடியும் பின்வாங்கக்கூடாது, கருத்து இதுதான். எது வந்தாலும் போராடி முடி. தங்கள் நிலையில் இருந்து நட்சத்திரங்கள் பிறழட்டும். முழு உலகும் நமக்கு எதிராக எழுந்து நிற்கட்டும். மரணம் என்றால் வேறு உடை மாற்றுவதுதான். அதனால் என்ன போயிற்று? இப்படிப் போராடு. கோழையாவதனால் நீ எந்த ஒரு துரதிஷ்டத்தையும் தவிர்த்து விட முடியாது. உலகிலுள்ள அத்தனை கடவுள்களையும் நீ கூவியழைத்துப் பார்த்தாகி விட்டது. துன்பம் அதனால் ஓய்ந்து விட்டதா? நீ வெற்றி பெற்றபோது கடவுளா உனக்கு உதவ முன்வந்தார்? அதனால் என்ன பயன்? போராடி முடி நீ எல்லையற்றவன். மரணமற்றவன். பிடிப்பற்றவன். எல்லையற்ற ஆத்மா ஆதலால் நீ அடிமையாக இருப்பது உனக்குப் பொருந்தாது. எழுந்திரு! விழித்துக்கொள்! எழுந்து நின்று போராடு! என்று போராட்டத்திற்கு வித்திடு கிறார் சுவாமி விவேகானந்தர்.
சோம்பேறியாய் கிடக்கும் மனிதனுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்க வேண்டும். நோய் வாய் பட்டுக் கிடப்பவர்களுக்கு மருந்து கொடுத்து சரி செய்யப்படுவதைப் போல தன் நிலை மறந்த மனிதனுக்கு ஞாபகப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. முன்னேறிச் செல்ல வேண்டும் என்ற ஊக்கம் எல்லோருக்கும் இருக்க வேண்டும்.
“உங்களுடைய நரம்புகளுக்கு முறுக் கேற்றுங்கள் நமக்குத் தேவை இரும்பைப் போன்ற தசைகளும், எஃகைப் போன்ற நரம்பு களும் தாம் காலமெல்லாம் அழுது கொண்டிருந் தது போதும், இனி அழுகை என்ற பேச்சே இருக்கக்கூடாது. சுயவலிமை பெற்ற மனிதர் களாக எழுந்து நில்லுங்கள்” என்று இந்த இளைய தலைமுறையைப் பார்த்துத்தான் சுவாமி விவேகானந்தர் அறைகூவல் விடுக்கிறார். ஆதலால் இளைஞர்களே சாதிப்பதற்கு ஏற்ற மனவலிமையை உருவாக்கி நாமும் நமது சமூகமும் நாளைய தலைமுறையும் சுபிட்சமாக வாழ இன்றிலிருந்தே தன் முனைப்போடு செயல் பட உறுதியெடுங்கள்! உறுதியாக எடுங்கள்!


--
Thanks and Regards

Ashok.....