Thursday, August 20, 2009

உளவு நிறுவனங்கள்

உளவு நிறுவனங்களின் கதைகளை படிக்கும் பொழுது மிகவும் சுவாரசியமாக இருக்கும். பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., இந்தியாவின் ரா, அமெரிக்காவின் சி.ஐ.ஏ, இஸ்ரேலின் மொசாட் போன்ற நிறுவனங்கள் செயல்பாடும் விதம் மிகவும் சுவாரசியமான கதை. இவர்கள் செயல்படும் விதம் தான் சுவாரசியமானதே தவிர அதன் End Result மோசமானது.

பெரும்பாலும் தன்னுடைய எதிரி நாட்டையோ அல்லது தனக்கு ஆதரவாக செயல்பட மறுக்கும் நாட்டையோ நாசமாக்குவது, அந்த நாடுகளிடம் இருந்து இராணுவ ரகசியங்களை பெறுவது, அந் நாடுகளை கண்காணிப்பது போன்றவையே உளவு நிறுவனங்களின் முக்கிய குறிக்கோள்.

இவ்வாறான பல உளவு நிறுவனங்களில் உலகின் மிகச் சிறந்த உளவு நிறுவனம் என்ற பெயரைப் பெற்றது இஸ்ரேலின் மொசாட் உளவு நிறுவனம் தான். 1972ம் ஆண்டு முனிச் நகரில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டியின் பொழுது இஸ்ரேலிய அத்லட்டிக் வீரர்கள் பாலஸ்தீன தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இதற்கு பதில் நடவடிக்கையாக இஸ்ரேலின் மொசாட், இதற்கு காரணமானவர்களை உலகின் பல மூலைகளில் இருந்தவர்களை தேடிச் சென்று கொன்று தீர்த்த கதை ராஜேஷ்குமாரின் க்ரைம் நாவல்களை விட மிக சுவாரசியமானது. ஆனால் இந் நிகழ்வு உளவு நிறுவனங்களின் கோர முகத்தை உலகுக்கு அடையாளம் காட்டியது. இதற்கு அந் நாட்டின் பிரதமர் போன்ற தலைவர்களும் ஆதரவு கொடுத்தார்கள் என்பதை நினைக்கும் பொழுது வியப்பாக இருக்கிறது.

உலகின் அனைத்து உளவு நிறுவனங்களுமே நாசகார செயல்களை செய்வதில் கைதேர்ந்தவர்கள். நமக்கு பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து தெரியும். காஷ்மீர் தொடங்கி கன்யாகுமரி வரை பாக்கிஸ்தானின் உளவாளிகள் பல இடங்களில் நிறைந்திருக்கிறார்கள். காஷ்மீர், பஞ்சாப், அசாம், ஆந்திரா, தமிழ் நாடு, கேரளா என்று இவர்கள் இல்லாத இடமே இல்லை. பாக்கிஸ்தானின் உளவாளிகளில் முஸ்லீம்களை விட இந்துக்கள் மற்றும் பிறர் தான் அதிகம். ஆண்கள் மட்டும் தான் உளவாளிகள் என்பது கிடையாது. பெண்களும் உண்டு. உளவாளியாக இருப்பவர்களுக்கு பணம் கொட்டி கொடுக்கப்படும். பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பு சர்வசக்தி படைத்த ஒரு அதிகார மையம். பாக்கிஸ்தானின் அரசுக்கோ, இராணுவத்திற்கோ கூட கட்டுப்படாமல் ஒரு நிழல் அரசாங்கம் போலவே இவர்கள் நடந்து கொள்வார்கள். இந்தியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இவர்களின் ஆதிக்கம் அதிகம். தலிபான் ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைக்க முக்கிய காரணமே ஐ.எஸ்.ஐ தான். அது போல பஞ்சாப், காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி மற்றும் ஆயுதங்களை அள்ளிக் கொடுத்ததோடு மட்டுமில்லாமல் வெளிநாட்டு தீவிரவாதிகளையும் நுழைத்தது ஐ.எஸ்.ஐ தான் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தியாவில் நடக்கும் பல குண்டுவெடிப்புகளுக்கு பிண்ணணியில் இருப்பதும் ஐ.எஸ்.ஐ உளவாளிகள் தான். இது தவிர இந்திய இராணுவ இரகசியங்களைப் பெறுவது, தொழில்நுட்பங்களை இந்தியா மற்றும் பிற நாடுகளிடம் இருந்து திருடுவது போன்றவையும் இவர்களின் முக்கியமான வேலை.

அது போலவே நம்முடைய இந்திய உளவு அமைப்பான ராவும் பாக்கிஸ்தானிலும், இலங்கையிலும் மற்றும் பிற தெற்காசிய நாடுகளிலும் நுழைந்து பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ போல ஒரு நிழல் அரசாங்கமாகவோ, சர்வ அதிகாரம் படைத்த அமைப்பாகவோ இல்லாமல் இந்தியப் பிரதமரின் நேரடி மேற்பார்வையில் அதிகபட்ச அதிகாரத்துடனே ரா செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ரா உளவு அமைப்பை தொடங்கி அதனை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டவர் இந்திரா காந்தி. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்றோர் ராவின் அறிக்கைகளையே பெரும்பாலும் நம்பி இருந்தனர். இராணுவ அதிகாரிகளின் அறிவுரைகளை விட ராவின் அறிவுரைகளையே இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் அதிகம் நம்பினர். இதனாலேயே இலங்கை விஷயத்தில் இந்தியாவிற்கு பின்னடைவு ஏற்பட்டது என இந்தியப் பாதுகாப்பு படையின் பின்னடைவு குறித்து எழுதிய பல இராணுவ நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் - ரா சர்வ அதிகாரம் பொருந்திய அமைப்பாக இந்தியப் பிரதமர்களின் நம்பிக்கையை பெற்ற அமைப்பாக இருந்திருக்கிறது. தொடர்ந்து அதே நிலையிலேயே இருந்தும் வருகிறது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை வகுப்பதில் ராவின் பங்களிப்பு முக்கியமானது.

ரா அமைப்பு 1968ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்த பொழுது தொடங்கப்பட்டது. அப்போதைய ஐ.பி - Intelligence Bureau அதிகாரி. ஆர். என். காவ் ரா அமைப்பு தொடங்குவதற்கு காரணமாக இருந்தார். Research and Analysis Wing என்பதன் சுருக்கம் தான் RAW. ஆரம்ப காலங்களில் ரா அதிகாரிகள் பெரும்பாலும் இந்திய தூதரகங்களில் தான் பணியாற்றிக் கொண்டிருந்தனர். ஆனால் தற்பொழுது பல இடங்களில் அவர்கள் பரவி இருக்கின்றனர். இந்திய மக்கள் அதிகளவில் வெளிநாடுகளில் இருப்பது இவ்வாறான உளவு வேலைகளுக்கு வசதியாக இருக்கிறது. இவர்கள் பல நிறுவனங்களில் வேலை பார்த்துக் கொண்டே உளவு வேலைகளையும் செய்வார்கள். ரா தொடங்கப்பட்ட காலத்தில் அதன் நோக்கம் அண்டை நாடுகளை இந்தியாவிடம் பணிய வைப்பது. இந்தியாவை இப் பிரதேசத்தின் வல்லரசாக, "பிரதேச பெரியண்ணண்" போல உருவாக்குவது தான் ராவின் முக்கிய குறிக்கோள். தெற்காசிய பிரந்தியத்தில் தான் வல்லரசாக வேண்டும், அதற்காக என்றால் பிற நாடுகள் இந்தியாவுடன் அணுசரணையாக இருக்க வேண்டும் என்பதாக இந்தியாவின் வெளியுறவு கொள்கை அமைந்து இருந்தது.

தெற்காசியாவில் ராவின் செயல்பாடுகளுக்கு குறிப்பிடத்தக்க வெற்றி கிடைத்தது. ஆரம்ப காலத்தில் பாக்கிஸ்தான், சீனா இவற்றை குறி வைத்து தான் ரா செயல்பட தொடங்கியது. ஆரம்பத்தில் சுமார் 250 பேருடன் தொடங்கப்பட்ட ரா பிரமாண்ட வளர்ச்சி பெற்றது. ஒரு கட்டத்தில் சுமார் 35,000க்கும் மேற்பட்ட ரா உளவாளிகள் பாக்கிஸ்தானில் இருப்பதாக பாக்கிஸ்தான் குற்றம்சாட்டி இருந்தது.

ராவின் வெற்றிகளில் முக்கியமானது பங்களாதேஷ் உருவானது தான். கிழக்கு பாக்கிஸ்தான், பாக்கிஸ்தானை பிளக்கும் ராவின் நோக்கத்திற்கு சரியான இடமாக இருந்தது. கிழக்கு பாக்கிஸ்தானில் உள்ள வங்காளிகள் மேற்கு பாக்கிஸ்தானால் நிராகரிக்கப்பட்டு இருந்தனர். "முக்தி பாகினி" என்று சொல்லப்படும் பாங்களாதேஷ் போராளி குழுக்களுக்கு ரா இந்தியாவில் பயிற்சி அளித்தது. இந்த போராளி அமைப்பு பாக்கிஸ்தானுக்கு எதிராக செயல்பட தொடங்கியது. 1971ல் இந்திய -பாக்கிஸ்தான் போரின் வெற்றி இந்திய இராணுவத்திற்கு கிடைத்த வெற்றி என்பதை விட ராவின் செயல்பாடுகளுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லலாம். இந்தியா வெற்றி பெற தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்த பிறகு இந்திய இராணுவத்தை கிழக்கு பாக்கிஸ்தானில் நுழைத்து ரா இந்தியாவை வெற்றி பெற வைத்தது.

ராவின் மற்றொரு முக்கியமான வெற்றி, சிக்கிம் இந்தியாவுடன் இணைந்தது. 1973ல் சிக்கிம்மில் நடந்த உள்நாட்டு பிரச்சனையை பயன்படுத்தி சிக்கிமை ரா இந்தியாவுடன் இணைய வைத்தது. 1975ம் ஆண்டு, சிக்கிம் இந்தியாவின் 22வது மாநிலமாக மாறியது.

நேபாளம், பூட்டான், மாலத்தீவு போன்ற அனைத்து தெற்காசிய நாடுகளிலும் ராவின் செயல்பாடுகள் இருந்தது.

ராவின் தோல்விகளில் முக்கியமானது இலங்கை பிரச்சனை தான். ஆரம்ப காலங்களில் புலிகள் மற்றும் பிற போராளி குழுக்களுக்கு பயிற்சி அளித்தது தொடங்கி, இந்திய-இலங்கை ஒப்பந்தம் வரை அனைத்தும் ரா இந்தியப் பிரதமர்களுக்கு அளித்த அறிவுரையின் காரணமாகவே நிகழ்ந்தது.
ரா அமைப்பின் பல நடவடிக்கைகள் ரகசியமானவை. அதிகம் வெளிவருவதில்லை. அவ்வப்பொழுது பத்திரிக்கைகளில் வரும் செய்திகள் தான் ராவின் நடவடிக்கைகளை வெளிப்படுத்திக்கொண்டிருக்க��
ன்றன. பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ யுடன் ஒப்பிடும் பொழுது ரா குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றிருக்கிறது. பங்ளாதேஷ் உருவானது, சிக்கிம் விவகாரம், பூட்டான், மாலத்தீவு போன்ற நாடுகளை இந்தியாவின் மாநிலங்கள் போல பல விஷயங்களில் இந்தியாவின் உதவியை எதிர்பார்க்க வைத்தது போன்றவை ராவின் வெற்றிகள். இலங்கையில் ராவின் நடவடிக்கைகள் தோல்வி அடைந்திருந்தாலும், அதன் செயல்பாடுகள் இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. கருணா விவகாரம் கூட இன்னமும் நடந்து கொண்டு இருக்கும் ராவின் செயல்பாடுகளுக்கு ஒரு உதாரணம்.
ஆனால் பாக்கிஸ்தானால் இந்தியாவில் நாசவேலைகளையும், தீவிரவாதத்தையும் மட்டுமே வளர்க்க முடிந்தது, இந்தியாவை தூண்டாட முடியவில்லை.

இந்தியாவின் ரா, பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., அமெரிக்காவின் சி.ஐ.ஏ, இஸ்ரேலின் மொசாட் மற்றும் பிற உளவு நிறுவனங்கள் அனைத்துமே பிற நாடுகளில் நாச செயல்களை விளைவித்து அந் நாடுகளை சீர்குலைப்பதை முக்கியமான செயலாக செய்திருக்கின்றன. இன்னும் செய்து கொண்டிருக்கின்றன. இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல, இந்தியா உட்பட


--
Thanks and Regards

Ashok.....

No comments:

Post a Comment