Thursday, August 20, 2009

சிலந்திகள் கையில் இளைஞர்கள்...

பெருகி வரும் தொழில் நகரங்கள், எந்திர வாழ்கையில் பணத்தை தேடும் மக்கள் கூட்டம். அதற்காக எத்தனை எத்தனை போராட்டங்கள். தமது வாழ்கையை மேம்படுத்திக்கொள்ள, இரவு, பகல் பாராமல் உழைக்கும் உள்ளங்கள். இவ்வாறான மக்களளின் அறியாமையை பயன்படுத்திக்கொண்டு, செழித்து வளரும் கார்ப்பரேட் நிறுவனங்கள், இது போதாது என்று “பணம் தேவையா? 24 மணி நேரங்களில் எளிதான கடன். சுலபமான மாதத்தவணைகளில்” என்று நரகத்தின் வாயில்கதவை திறந்து வைத்து காத்திருக்கும் தனியார் வங்கிகள்.
இவ்வாறான நிலையில் சத்தமில்லாமல் சீரழிந்து வருகிறது இளைஞர்களின் வாழ்க்கை. ஆம் ” என்னிடம் சில இளைஞர்களை கொடுங்கள் இந்த உலகையே மாற்றி காட்டுகிறேன்” என்று ஒருவர் கூறினார். ” இன்றைய இளைஞர்களே நாளைய இந்தியாவின் எதிர்காலம்” என்று ஒருவர் கூறினார். “இளைஞர்களே, நாளைய ஆட்சி மாற்றம் உங்கள் கையில் தான் உள்ளது” என்றும் ஒருவர் கூறிக்கொண்டுள்ளார். இவ்வாறான இளைஞர்கள், கூலிப்படைகளாகவும், குண்டர்களாகவும் மாற்றபடுகின்றனர். அதிர்ச்சியாக உள்ளதா, மேலே படியுங்கள்.
அதிகம் படித்தவர்கள் மென்பொருள் வேலைக்காக வெளிமாநிலம், வெளிநாடு சென்றுவிடுகிறார்கள். அளவாக படித்தவர்கள் அதற்கேற்ப வேலைக்கு செல்கிறார்கள். ஆனால் அரைகுறையாக படித்தவர்கள்? பல ஆணி புடுங்கும் நிறுவனங்களின் ஆசை வார்த்தைகளை நம்பி, அல்லாடிகொண்டிருக்கிறார்கள். ஆம், கவர்ச்சியான மாத சம்பளம், கடலை போட செல்பேசி, வருடம் முழுவதும் ஊக்கதொகை. இந்த வேலைக்கான தகுதி இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்தால் போதும், என்ற விளம்பரங்களை பார்த்து விற்பனை பிரதிநிதிகலாகும் இளைஞர்களே அவ்வாறு மாற்றப்படுகின்றனர்.
முதலில் அன்பொழுக பேசி, இந்த வேலை மூலம் இவ்வளவு பணம் கிடைக்கும் என்று ஊக்கப்படுத்தி, கேளிக்கை, விருந்து என்று உற்சாகப்படுத்தி பின்பு பாதாளத்தில் தள்ளும், வேலையை செவ்வனே செய்து வருகின்றன பல நிறுவனங்கள் மற்றும் வங்கிகள். மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட இலக்கை (விற்பனையில் அல்லது வசூலில்) கொடுத்து, அதற்காக அவர்களை இரவு பகல் பாராமல் வேலை வாங்குகின்றனர். ஒரு வேலை இலக்கை எட்டத்தவறினால் அவர்கள் மிருகங்களை விட கேவலமாக நடத்தி, வெளியேற்றப்படுகிறார்கள். இதில் தப்பி பிழைத்து, இலக்கை அடைபவர்களுக்கு எந்த விதமான பதவி உயர்வோ, நிரந்தர பனி நியமனமோ வழங்கப்படுவதில்லை. தொழிலாளர் வைப்பு நிதி போன்ற எந்த ஒரு சலுகைகளும் வழங்கப்படுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் இவ்வாறான நிறுவனங்களின் பணியாளர் பட்டியலில் கூட இவர்கள் சேர்க்கப்டுவதில்லை.
தமது மேலதிகாரிகளின் இழிசொல்லுக்கு பயந்து, இலக்கை அடைய வேண்டும் என்று பாடுபடும் சில விற்பனை பிரதிநிதிகள், தமது எல்லைகளை மீறி, தவறான வாக்குறுதி, வசூலிக்கும் பொழுது வன்முறையை பயன்படுத்துவது போன்ற காரணங்களால், அடி உதை, சிறை தண்டனை போன்றவற்றுக்கும் ஆளாகின்றனர். பின்னாளில் இதே அவர்கள் பாதை மாற காரணமாக அமைகிறது.
ஏற்கனவே அரசியல், சினிமா, மது, மாது என்று சீரழியும் இளைஞர்கள் பட்டாளம் ஒருபுறம் இருக்க, வாழ்கையில் முன்னேற வேண்டும் என்ற நோக்குடன் வரும் இளைஞர்கள் இவ்வாறான சிலந்திகள் கைகளில் சிக்கி சீரழிவதை தடுக்க எந்த ஒரு சட்டமும் இல்லையா? இல்லை, இதற்காக குரல் கொடுக்க ஈரமுள்ள நெஞ்சங்கள் எவரும் இல்லையா? உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்நோக்கும்….--
Thanks and Regards

Ashok.....

No comments:

Post a Comment