Thursday, August 20, 2009

நாம் நாமாகவே இருப்போம்.....இந்தியாவின் பெருமையை உலக அளவில் உயர்த்துவோம்.....!!!!

நாம் எங்கே போய் கொண்டு இருக்கிறோம். சற்று சிந்தித்துப் பாருங்கள். பெண் வர்க்கத்தை ‘பாரத மாதா’ வென்று அழைக்கப்படும் இத்திருநாட்டில் பிறந்த நாம் கலாச்சாரத்திற்காகவே இவ்வுல அரங்கில் மதிக்கப்படுகிறோம் என்பதில் சிறிதும் ஐயமில்லை அல்லவா? ஆனால் இப்பொழுது இந்நிலை மாறிவருவதைக் காணும் பொழுது சற்று அச்சமாக உள்ளது.
அங்கங்களை மறைப்பதற்காக தான் உடையே தவிர, அதை வெளிக்காட்ட அல்ல. அயல்நாட்டவர்களின் உடை அவர்களின் கலாச்சாரத்திற்கு பொருத்தமாக இருக்கலாம். ஆனால், ஒருவனுக்கு ஒருத்தி என வாழும் நம் நாட்டு கலாச்சாரத்திற்கு ஆடை குறைவின்றி உடை அணிவது தான் சிறப்பாகும். நாகரிகம் என்ற பெயரில் இன்றைய பெண்கள் சிலர் அணியும் உடையை காணும் பொழுது பெண்களுக்கே கண் கூசுகிறது. ஆண்களுக்கு சொல்லவே தேவையில்லை.
நாடு என்ன செய்தது நமக்கு என்று கேட்காமல், நீங்கள் எதுவும் நாட்டுக்கு செய்யாவிட்டாலும், இந்நாட்டின் பழமையான கலாச்சாரத்திற்கு பங்கம் விளைவிக்காமல் இருப்பதே நீங்கள் நாட்டிற்கு செய்யும் பேருதவியாகும். இந்தியர்களை வெளிநாட்டவர் விரும்புவதற்கு காரணமே நமது கலாச்சாரமும், அயராத உழைப்புமே ஆகும். எல்லா துறையிலும் அயல்நாட்டினருக்கு ஈடு இணையாக நாம் முன்னேறி வருகிறோமே ஏன்? உடை விஷயத்தில் மட்டும் கூடாது என்று நினைப்பது மாபெரும் தவறாகும்.
வெள்ளித்திரை, சின்னத்திரை போன்ற மீடியா பொழுதுபோக்கிற்காகவே தவிர, அதில் காட்டப்படும் விஷயங்களை அப்படியே பின்பற்றுவதற்காக அல்ல. “மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா” என்றார் பாரதியார். அதைவிட இந்தியராய் பிறந்ததற்கு பெருந்தவம் செய்திருக்க வேண்டும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை குடும்ப ஒற்றுமை, நல்ல கலாச்சாரம் போன்றவை நம் நாட்டில் தான் காண முடியும்.
சுடிதார் நல்ல உடைதான், ஆனால் துப்பட்டா, கழுத்திற்கா அல்லது மார்பிற்கா என்று தெரியவில்லை. நிறைய பேர் இதை மனதில் கொள்வதில்லை. இன்றைய காலகட்டத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும், வாகனம் ஓட்டும் பெண்களுக்கும் சுடிதார் மிக வசதியான உடை ஆகும். நைட்டி என்ற பெயரே இரவில் வீட்டிக்குள் அணியும் உடை என்று தானே பொருள். ஆனால் இன்றைய பெண்கள் அதை அணிந்து கொண்டு வெளியே வருவதைப் பார்க்கும் பொழுது மிகவும் வருத்தமாக உள்ளது.
மேலும் பொது இடங்களில் எப்படி நடந்து கொள்வது என்பது இன்றைய தலைமுறையினருக்கு தெரிவதில்லை. திருமணம் ஆனவர்கள் கூட பீச், பூங்கா கோயில் போன்ற இடங்களில் வரம்பு மீறி நடந்து கொள்வதைப் பார்க்கும் பொழுது, நாம் இந்தியாவில் தான் இருக்கிறோமா என்று சந்தேகம் ஏற்படுகிறது. ஆடை குறைப்பினால் கற்பா குறைந்துவிடும் என்று நினைக்காதீர்கள். நன்றாக உடை உடுத்தினால் எல்லோரும் மதிப்பார்கள். போற்றுவார்கள்.
இன்று பெரிய நகரங்களில் பெண்கள் சிகரெட் பிடிக்கிறார்கள். மது அருந்துகிறார்கள் என்று கேள்விப்படும் பொழுது மனம் அழுகிறது. எதற்காக இந்த முறையற்ற வாழ்க்கை, கேட்டால் மனஅழுத்தம் என்று கூறுகிறார்கள். கிராமத்தில் வசிக்கும் குடும்ப தலைவிகளுக்குக் கூட மனஅழுத்தம் உண்டு. இதற்கு தீர்வு இந்த பழக்கங்கள்தான் என்றால் படிப்பு எதற்கு. இதற்கு மாற்றுவழி வேண்டும் என்றால் நல்ல ஆரோக்கியமான கருத்துகள் உள்ள புத்தகங்கள் படிக்கலாம். விடுமுறை நாட்களில் அருகில் உள்ள அனாதை, ஊனமுற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களுக்குச் சென்று அங்குள்ளவர்களுக்கு மன ஆறுதல் கொடுக்கலாம். இப்படி எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. கலாச்சாரம் என்ற பெயரில் கெட்ட பழக்கங்களுக்கு உங்களை நீங்களே பலியாடுகள் ஆக்கிவிடாதீர்கள்.
ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி, விவேகானந்தர் போன்ற ஆன்மீக பெரியோர்களை உலகிற்கே தந்த புண்ணிய பூமியில் பிறந்தவர்கள் நாம். அதன் கலாச்சாரத்தை நிலை நாட்ட வேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும் ஆணுக்கு நிகர் பெண்கள் என்று எல்லா துறையிலும் முன்னேறி வரும் இக்காலத்தில் ஆண்களுடன் பெண்கள் பழக வேண்டி உள்ளது. இது தவிர்க்க முடியாதது. ஆனால் அது எல்லைக்குள் இருக்க வேண்டும். ஆண்கள், பெண்களை தோழியாக, சகோதரியாக நினைக்கும்படி இருக்க வேண்டும். நட்பு, அவர்களின் உணர்ச்சிகளை தூண்டும்படி உடை, நடை இருத்தல் தவறாகும்.
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
அதனால் இதை ஒரு சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ளாமல் இன்றைய தலைமுறையினர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வேண்டாமே! இந்த அயல் நாட்டு கலாச்சார மோகம்.
நாம் நாமாகவே இருப்போம்.
இந்தியாவின் பெருமையை உலக அளவில் உயர்த்துவோம்.


--
Thanks and Regards

Ashok.....

No comments:

Post a Comment