Thursday, August 20, 2009

அந்த நூறு இளைஞர்கள் எங்கே இருக்கிறார்களோ..?

'நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல், நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றதாகும்.'

'உங்களுடைய நரம்புகளுக்கு முறுக்கேற்றுங்கள், நமக்குத் தேவை, இரும்பைப் போன்ற தசைகளும் எஃகைப் போன்ற நரம்புகளும்தான்.' சுய வலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள்!

துவண்டு கிடந்த இளைஞர் சமுதாயத்திற்கு இப்படி புது ரத்தம் பாய்ச்சிய அந்தச் சிம்மக் குரல், சுவாமி விவேகானந்தரிடம் இருந்து ஒலித்தது.

நரேந்திரன்,1863-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் நாள் பிறந்தார். சிறு வயது முதல் நரேந்திரன், சன்னியாசிகள்-ஏழைகள் மீதுகாட்டிய அன்புக்கு அளவில்லை. தன் வீட்டிற்கு வந்து யாசிப்பவர்களுக்கு, கிடைத்ததையெல்லாம் கொடுத்துவிடுவார்.

கடவுளைக்காண வேண்டும் என்ற வேட்கை சிறுவயதிலேயே நரேந்திரனுக்கு ஏற்ப்பட்டது. கடவுளைக் காணாவிடில் கற்பதாலும், கற்றவர்களோடு உறவாடுவதாலும் என்ன பயன் என்று அவர் உள்ளத்தில் சிந்தனைகள் எழுந்தன. பெரியோர் பலரை அணுகி, கடவுளைக் கண்டிருக்கிறீர்களா என ஆர்வத்தோடு வினவினார். ஆனால், இவருக்குத் திருப்தியான பதிலை யாரும் அளிக்கவில்லை.

அவ்வப்போது இவருக்குத் தெரிந்த ஒரு நண்பர்மூலம் தட்சினேணஸ்வர ஆலயத்தில் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் என்ற மகான் வாழ்வது தெரியவந்தது. அவரைச் சந்திக்கச் சென்றார். நரேந்திரனைப் பார்த்ததும், பரமஹம்சர் பரவசமடைந்தார். பழைய நண்பன் ஒருவனைக் கண்டவர் போல உரையாடினார். 'எத்தனை நாள் நான் ஆவலுடன் உனக்காகக் காத்திருப்பது' என்று ஏக்கத்துடன் கூறினார். ராமகிருஷ்ணர். நரேந்திரர், ராமகிருஷ்ணரைப் பார்த்து, 'நீங்கள் கடவுளைக் கண்டதுண்டா?' என வினவினர். அதற்கு ராமகிருஷ்ணர், 'நான் உன்னைக் காண்பதைப்போல கடவுளைக் கணடிருக்கிறேன். வேண்டுமானால் அவரை உனக்குக் காட்டுகிறேன்' என்றார். அதுமுதல் அவர், ராமகிருஷ்ணரின் பக்தரானார். நரேந்திரன், சுவாமி விவேகானந்தரானார்.

ராமகிருஷ்ணரின் மறைவிற்குப் பிறகு, ஆசிரமத்திற்கு உதவி வந்த பலர் பாராமுகமாக இருந்துவிட்டார்கள். அதுமட்டுமல்ல, ஊர் மக்களும் விவேகானந்தரையும், மற்ற சீடர்களையும் பழித்தார்கள். பல நாட்கள் அவர்கள் உணவில்லாமல் பட்டினியோடு இருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது அவர்களுக்கு ஆறுதல் சொல்லி வழிநடத்தினார். விவேகானந்தர்.

பாரத நாட்டு மக்களை நேரிடையாகத் தரிசிக்க சுவாமி விவேகானந்தர் விரும்பினார். 1881-ஆம் ஆண்டு கையில் கமண்டலமும், தண்டமும் தாங்கி அவர் புறப்பட்டார். பணம் எதையும் வைத்துக்கொள்வதில்லை என்றும், வலிய வருகிற உணவை மட்டும் புசிப்பதென்றும், நாள?65;்கென்று எதையும் தேடி வைப்பதில்லை என்றும் அவர் விரதம் பூண்டார். இப்படியாக அவர் பல ஊர்களைக் கடந்து கன்னியாகுமரி வந்தடைந்தார். முக்கடல் சங்கமிக்கும் குமரிமுனையில் கடல நடுவே இருக்கும் பாறையில மூன்று நாட்கள் அன்னை பராசக்தியை நோக்கித் தவமிருந்தார். ?91;்யவேண்டிய காரியங்கள் பற்றி அவர் மனத்தில் உதயமாயிற்று.

சுவாமி விவேகானந்தரிடம் இயற்கையாகவே நல்ல நினைவாற்றல் இருந்தது. இதனால் எந்தப் புத்தகத்தையும் விரைவாகப் படித்து முடித்துவிடுவார். அவரது அபார நினைவாற்றலை விவரிக்கும் ஒரு சம்பவம். விவேகானந்தரின் அறையில் 'என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா' என்ற நூலின் 25 பாகங்கள் அழகாக அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சரத் சந்திரா என்ற சீடர், சுவாமிஜியின் அறைக்கு வந்தார். அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் பார்த்து சுவாமிஜி 'இந்தப் புத்தகங்களையெல்லாம் படித்து முடிக்க ஒரு ஜென்மம் போதாது போல இருக்கிறதே' என்றார் வியப்புடன்.

'சரத் இதைப் படிக்க அவ்வளவு காலம் எதற்கு? நான் இங்கு வந்த சிலமாதங்களுக்குள் பத்ததுப் பகுதிகளைப் படித்து முடித்துவிட்டேன்' என்றார். சுவாமிஜி. சரத் சந்திரர் நம்பவில்லை. தான் படித்துள்ள பத்துப் பகுதிகளில் எதைப்பற்றிக் கேட்டாலும் பதில் சொல்லத் தயார் என்று சுவாமிஜி கூறியதும் சரத் உற்சாகமடைந்தார். பத்துப் பகுதிகளையும் எடுத்து, அவற்றில் தமக்குத் தோன்றிய கேள்விகளையெல்லாம் கேட்டார். சுவாமிஜி ஒவ்வொன்றுக்கும் உரிய பதிலைத் தெளிவாக எடுத்துரைத்ததும் சரத் சந்திரரின் வியப்பூ, எல்லை கடந்தது.

அன்னை சாரதையின் ஆசி பெற்று 1893 செப்படம்பர் 11-ஆம் தேதி சிகாகோவில் சர்வமத மகாசபையில இந்திய பிரதிநிதியாக சுவாமிஜி கலந்துகொண்டார். அதற்கு ஏற்பாடுகள் பொருளுதவியும் செய்தவர்கள், சென்னையைச் சேர்ந்த பக்தர்கள்.

' கொலம்பியன் ஹால்' என்ற மண்டபத்தில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த சுமார் பத்தாயிரம் பேர்கூடினர். அவைத் தலைவர் ஒவ்வொருவராகப் பேச அழைத்தார். சுவாமிஜி முறை வந்தது. அப்போது அவர் அம்பாள் சரஸ்வதியையும், தமது குருநாதரையும் நினைத்துப் பேசத் தொடங்கினார்.

'அமெரிக்க நாட்டுச் சகோதரி, சகோதர்களே' என்று தொடங்கினார். அவ்வளவுதான் அவரை மேலும் பேசவிடாது தடுத்தது. கரவொலி, காரணம், அதுவரை மற்றவர்கள் 'சீமாட்டிகளே, சீமான்களே' என்று விளித்துப் பேசியதுதான். உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்ற தத்துவத்தை மிக எளிமையகாத் தனது முதல் உரையிலேயே எடுத்துக் கூறிவிட்டார். சுவாமி விவேகானந்தர்.

விவேகானந்தரின் வித்தியாசமான உரையால் ஈர்க்கப்பட்ட சகோதரி நிவேதிதை பிற்காலத்தில் இவரது பிரதான சீடரானார். பாரதம் வந்து இதையே தனது தாய்நாடாகக் கருதினார். பாரத மக்களுக்குப் பல சேவைகள் புரிந்தார். விவேகானந்தரின் அறிவுரைப்படி பெண் முன்னேற்றத்திற்கு முதன் முதலில் வித்திட்டவரும் இவரே. இவரைச் சந்தித்த பிறகே கவிராஜன் பாரதி பெண் முன்னேற்றத்திற்காகப் போர்க்குரல் எழுப்பினான்.

'உங்கள் தேசத்திற்கும் எங்கள் தேசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?' என்று ஒரு வெளிநாட்டினர், விவேகானந்தரிடம் கேட்டபோது, 'உங்கள் நாட்டில் தாயைத் தவிர மற்ற பெண்களைத் தாரமாக எண்ணுவார்கள். மாறாக எங்கள் நாட்டில் தாரத்தைத் தவிர மற்ற பெண்களைத் தாயாகப் போற்றுகிறோம்' என்றார். விவேகானந்தரின் இத்தகைய பேச்சாலும், அறிவுரையாலும் மேலை நாட்டினர் மத்தியில் பாரதத்தின் பெயர், புகழ்பட மிளிர்ந்தது.

' இளைஞர்களே! மேலை நாட்டினரைப் பார்த்து வெறுமனே எதிரொலிப்பது, கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது, சார்ந்திருப்பது இவை அனைத்தும் கோழைத்தனம். நான் ஒரு இந்தியன் என்பதில் பெருமை கொள்! பாரத நாட்டில் பிறந்த அனைவரும் என் சகோதர்கள் என்று பெருமிதத்துடன் பறைசாற்று' - இவ்வாறு எதிர்கால இந்தியாவின் நன்மைக்காக இளைஞர்கள் செய்யவேண்டிய உன்னதகக் கடமை பற்றி சுவாமிஜி உபதேசித்தார்.

கீதையில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் அர்ஜூனனுக்கு வீரத்தையும் வலிமையையும் கூறியதுபோல் 'எழுமின், விழிமின், கருதிய காரியம் கைகூடும் வரை உழைமின்' என்று உபதேசித்த சுவாமி விவேகானந்தர், 1902-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் நாள் மீண்டும் பிரபஞ்சத்தில் கலந்தார். அவர் கேட்ட அந்த நூறு இளைஞர்கள் எங்கே இருக்கிறார்களோ?


--
Thanks and Regards

Ashok.....

No comments:

Post a Comment