Thursday, August 20, 2009

இந்தியாவில் பல்புகளைத் தடைசெய்ய வேண்டும்..

இந்தியாவில் பல்புகளைத் தடைசெய்ய வேண்டும் என்ற பிரச்சாரத்தை இப்போது கிரீன்பீஸ் இயக்கம் தொடங்கியுள்ளது. அப்படித் தடைசெய்யப்பட்டால் நமது நாட்டின் மின்சக்தி பெருமளவில் மிச்சமாகும் என்பதோடு பூமியின் சூடேற்றம் (global warming) எனப்படும் உலக அளவிலான வெப்பத்தை அதிகரிக்கும் வாயுக்களின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கும் நாம் உதவ முடியும் என கிரீன்பீஸ் கூறுகிறது. பிரபஞ்ச வெப்பத்தை அதிகரிக்கும் மாசுகளை ஏற்படுத்துகிற மோசமான ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான் ஆகியவற்றோடு இந்தியாவும் அந்தப் பட்டியலில் இருக்கிறது. எதிர்வரும் ஆண்டுகளில் பிரபஞ்ச வெப்பம் சுமார் நான்கு டிகிரி செல்ஷியஸ்வரை அதிகரிக்கும் எனவும் அதனால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனால் வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட்டுப் பலத்த சேதம் உண்டாகும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் மின் உற்பத்தியில் தற்போது அணுமின் நிலையங்களின் பங்களிப்பு மிக மிகக் குறைவுதான். கல்பாக்கத்தில் உள்ள அணு மின்நிலையத்திலிருந்து கிடைக்கும் மின்சாரம் 460 மெகாவாட் மட்டுமே. ஆனால், காற்றாலைகள் மூலமாக உற்பத்திசெய்யப்படுவதோ 2,000 மெகாவாட். மிகவும் நீண்ட கடற்கரையைக் கொண்ட நமது மாநிலத்தில் காற்றாலை மூலமாக மின்சாரம் தயாரிப்பதற்கு மேலும் அதிக வாய்ப்புகள் உள்ளன. காற்றாலை மின் உற்பத்தி இரு மடங்காக மாறினால் அது கூடங்குளத்தில் அமையவிருக்கும் நான்கு அணு உலைகளுக்கு ஈடான மின்சாரத்தை அளித்துவிடும். ஆனால், இது பற்றி அதிகாரவர்க்கம் ஆர்வம் காட்டுவதில்லை.

இந்திய அளவில் உற்பத்திசெய்யப்படும் மின்சாரத்தில் சுமார் இருபது சதவீதம், வீடுகளில் விளக்கெரிப்பதற்கே செலவாகிவிடுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதை மிச்சப்படுத்துவதற்கு பல்புகளைத் தடைசெய்துவிட்டு 'காம்பாக்ட் ஃப்ளோரசன்ட் லைட்டுகளை (compact fluorescent lights - CFL) பயன்படுத்த வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இவ்வகை விளக்குகள் தற்போதுள்ள பல்புகளைவிட அதிக விலை கொண்டவை. என்றாலும் அவை பல்புகளைக் காட்டிலும் எண்பது சதவீதம் குறைவான மின்சாரத்தில் எரிவதோடு நீண்ட காலம் நீடிக்கக்கூடியவை, இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சுமார் ஆறரை கோடி பல்புகள் பயன்படுத்தப்படுவதாக கிரீன்பீஸ் கூறுகிறது.
மின்சாரத் தேவைக்காக அணு உலைகளைக் கட்டி மக்களின் உயிர்களைப் பணயம்வைப்பதைக்காட்டிலும் மின்சக்தியைச் சேமிக்கும் இத்தகைய முறைகளைக் கையாள அரசு முன்வர வேண்டும். வெள்ளம் வரும்போதும் வறட்சி ஏற்படும்போதும் கூப்பாடு போடுவதைக் காட்டிலும், அவற்றுக்குக் காரணமான பூமி சூடேற்றம் போன்ற பிரச்சினைகளைத் தடுக்க முனையும் அரசாங்கமே மக்கள் நல அரசாக இருக்கும்

--
Thanks and Regards

Ashok.....

No comments:

Post a Comment