Thursday, August 20, 2009

சுயவலிமை பெற்ற மனிதர் களாக எழுந்து நில்லுங்கள்...!!!

மண்ணில் பிறக்கும் அனைத்து மனிதனும் வீட்டிற்கோ நாட்டிற்கோ ஏதாவது பயன் தரும் விதத்தில் தன்னுடைய செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறான். ஆனால் சோம்பேறித் தனத்தினாலும் தள்ளிப் போடுதலினாலும் சாதிக்க வேண்டியதை மறந்து போகிறான். அப்படி மறந்து போகின்றவர்களின் இதயத்தை தூசுதட்டுவது மிக முக்கியப் பணியாகும். இது எல்லோருடைய கடமையும் கூட…..
தனிமனிதனின் முயற்சிதான் குடும்பத்தை வளப்படுத்துகிறது. குடும்பங்களின் வளர்ச்சி சமூகத்தை வளப்படுத்துகிறது. சமூகத்தின் வளர்ச்சி நாட்டை வளப்படுத்துகிறது. அப்படியானால், ஒவ்வொரு தனிமனிதனும் வளர்ச்சிப்பாதையில் போராட வேண்டும் என்பது தெளிவாகிறது. லெபனான் நாட்டுக்கவிஞன் கலீல் ஜிப்ரான் “”நாடு நமக்கென்ன செய்தது என்று கேட்காதே, நாட்டிற்கு நாம் என்ன செய்தோம் என்று கேள்” என்று குறிப்பிடுகிறார். நாட்டிற்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்றால் முதலில் முயற்சி செய்ய வேண்டும். நாம் செல்லும் இலக்கின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும், தன்மீது தானே நம்பிக்கை வைக்கவில்லை என்றால் ஒருபோதும் வெற்றியடைய முடியாது. “”எவன் ஒருவனுக்கு தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன். பண்டைய மதங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று சொல்கிறது” என்று சுவாமி விவேகானந்தர் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
கிடைக்கும் என்று போராடுவதை விட, கிடைக்க வேண்டும் என்று போராட வேண்டும். நாம் எதுவும் செய்யாமல் இருந்து விட்டு தெய்வத்திடம் முறையிடுவது மூடநம்பிக்கைதான் என்பதில் சந்தேகமே இல்லை. “தெய்வம் சோறுபோடும் என்று திண்ணையில் உட்கார்ந்திருந்தால் சோறு போடாது’ என்று கிராமப்புறங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்.
“”‘எழுந்து நின்று போராடு. ஓர் அடியும் பின்வாங்கக்கூடாது, கருத்து இதுதான். எது வந்தாலும் போராடி முடி. தங்கள் நிலையில் இருந்து நட்சத்திரங்கள் பிறழட்டும். முழு உலகும் நமக்கு எதிராக எழுந்து நிற்கட்டும். மரணம் என்றால் வேறு உடை மாற்றுவதுதான். அதனால் என்ன போயிற்று? இப்படிப் போராடு. கோழையாவதனால் நீ எந்த ஒரு துரதிஷ்டத்தையும் தவிர்த்து விட முடியாது. உலகிலுள்ள அத்தனை கடவுள்களையும் நீ கூவியழைத்துப் பார்த்தாகி விட்டது. துன்பம் அதனால் ஓய்ந்து விட்டதா? நீ வெற்றி பெற்றபோது கடவுளா உனக்கு உதவ முன்வந்தார்? அதனால் என்ன பயன்? போராடி முடி நீ எல்லையற்றவன். மரணமற்றவன். பிடிப்பற்றவன். எல்லையற்ற ஆத்மா ஆதலால் நீ அடிமையாக இருப்பது உனக்குப் பொருந்தாது. எழுந்திரு! விழித்துக்கொள்! எழுந்து நின்று போராடு! என்று போராட்டத்திற்கு வித்திடு கிறார் சுவாமி விவேகானந்தர்.
சோம்பேறியாய் கிடக்கும் மனிதனுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்க வேண்டும். நோய் வாய் பட்டுக் கிடப்பவர்களுக்கு மருந்து கொடுத்து சரி செய்யப்படுவதைப் போல தன் நிலை மறந்த மனிதனுக்கு ஞாபகப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. முன்னேறிச் செல்ல வேண்டும் என்ற ஊக்கம் எல்லோருக்கும் இருக்க வேண்டும்.
“உங்களுடைய நரம்புகளுக்கு முறுக் கேற்றுங்கள் நமக்குத் தேவை இரும்பைப் போன்ற தசைகளும், எஃகைப் போன்ற நரம்பு களும் தாம் காலமெல்லாம் அழுது கொண்டிருந் தது போதும், இனி அழுகை என்ற பேச்சே இருக்கக்கூடாது. சுயவலிமை பெற்ற மனிதர் களாக எழுந்து நில்லுங்கள்” என்று இந்த இளைய தலைமுறையைப் பார்த்துத்தான் சுவாமி விவேகானந்தர் அறைகூவல் விடுக்கிறார். ஆதலால் இளைஞர்களே சாதிப்பதற்கு ஏற்ற மனவலிமையை உருவாக்கி நாமும் நமது சமூகமும் நாளைய தலைமுறையும் சுபிட்சமாக வாழ இன்றிலிருந்தே தன் முனைப்போடு செயல் பட உறுதியெடுங்கள்! உறுதியாக எடுங்கள்!


--
Thanks and Regards

Ashok.....

No comments:

Post a Comment